கட்டுரை

இந்திராவா ? காமராஜரா ? - காங்கிரசுக்கு இன்றைய தேவை யார்?

வாணிதாஸ்

11 ஜனவரி,  1966 ஆம் ஆண்டு. தூங்கிக் கொண்டிருந்த இந்திரா காந்தியை எழுப்பியது ஒரு தொலைபேசி அழைப்பு. லால்பகதூர் சாஸ்திரியின் மரணம் அப்போதைய சோவியத் யூனியனிலிருந்த உஸ்பெகிஸ்தானில் நிகழ்ந்திருந்தது. தகவல் வந்த இரண்டு மணிநேரத்திற்குள் உள்துறை அமைச்சரான குல்சாரிலால் நந்தாவுக்கு இடைக்கால பிரதமராக குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  ஒய்.பி. சவான், சஞ்சீவ் ரெட்டி , மகாராஷ்டிராவின் எஸ்.கே.பட்டேல் என்ற பலரும் பிரதமராக ஆசைப்பட்டாலும் மொரார்ஜி தேசாய் வலுவான போட்டியாளராக கருதப்பட்டார். இந்திரா காந்தி அப்போது தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து நெருக்கமானவர்களோடு கலந்தாலோசித்த இந்திரா காந்தி மனதிலும் பிரதமர் ஆசை லேசாக துளிர்விட்டது.

அன்றைய தினத்தின் முற்பலில் சாஸ்திரியின் உடல் சோவியத் விமானத்தில் புது டில்லி வந்தது. நாட்டின் முக்கியமானவர்கள் பாலம் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். எல்லோரிடமும் அடுத்த பிரதமர் யாராக இருக்குமென்ற கேள்வியிருந்தது. ஆனால் அதற்கான பதில் ஒருவர் மனதில் மட்டுமே இருந்தது. அவர் காங்கிரஸ் கட்சியில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த அதன் தலைவரான கே. காமராஜ் .

சிண்டிகேட் தலைவர்கள் காமராஜை பிரதமராக வற்புறுத்த அவர் இந்திராகாந்தியை சுட்டிக் காட்டினார். காமராஜரின் முடிவை கேள்விப்பட்ட மொரார்ஜி தேசாய் ருத்ர தாண்டவமாடினார். காமராஜருடன் மோதிப்பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

நேரு காலமாவதற்கு முன்பிருந்தே காமராஜருக்கு தேசாயை பிடிப்பதில்லை. நேருவின் கடைசிக் காலத்தில் நேருவிற்கு பின் யாரென்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரதானமாயிருந்தது. 1963 அக்டோபர் மாதம் திருப்பதி கோவிலுக்கு நான்கு காங்கிரஸ் தலைவர்கள் வருகை புரிந்தனர். அந்த நான்கு பேர் வங்கத்தின் தலைவர் அதுல்யா கோஷ்,  சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா மற்றும் காமராஜர்.  வேங்கடாசலபதியை தரிசித்தவுடன் ஒரு ரகசிய ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆலோசனை அடுத்த பிரதமர் யார் ? அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? என்ற இரண்டு கேள்விகளை முன் வைத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. தொடர்ச்சியாக நேருவின் ஆசியுடன் காமராஜர் தேசிய காங்கிரஸின்  தலைவரானார். திருப்பதி சென்ற காலத்திலிருந்து நால்வரணிக்கு பிடிக்காத ஒரு லிஸ்டில் முதலிடம் தேசாய்க்குத்தான். நால்வரணியுடன் மகாராஷ்டிராவின் எஸ்.கே. பட்டேல் சேர ஐவரணியானது. இந்த அணிதான் காங்கிரசின் சிண்டிகேட்டின் மையப்புள்ளி. 1964 மே இறுதியில் நேரு காலமாக அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி பிரம்மாண்டமானது.

சிண்டிகேட் தலைவர்கள் காமராஜரை வற்புறுத்த,  மறுத்த அவர் சாஸ்திரியை முன் மொழிகிறார். தங்களது சகாக்களிடம் ஆதரவு திரட்டும் காரியத்திலிறங்கினார்கள். எதிரணியில் தேசாய்க்காக உத்தரப்பிரதேசத் தின் சி.பி.குப்தா , மத்தியபிரதேசத்தின் மிஸ்ரா மற்றும் பலர் ஆதரவு திரட்டினர்.

நேரு மறைந்து 5 ஆம் நாள் கழித்து, 1-6 - 1966 அன்று இரவு காமராஜரும் தேசாயும் பேச்சு வார்த்தை நடத்தினர். பூட்டிய கதவுகளுக்குப் பின் என்ன பேசப்பட்டது என்பது சிதம்பர ரகசியம். பேசி முடித்து வெளியேறிய தேசாய் , லால் பகதூர் சாஸ்திரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவித்தார்.

1966 -ல் இரண்டாவது முறையும் தன்னை பிரதமராக விடாமல் காமராஜர் தடுக்கிறார் என்று கேள்விப்பட்ட தேசாய் மோதிப்பார்ப்பது என்று முடிவெடுத்தார். நிலவரத்தை புரிந்து கொண்ட காமராஜர் தெளிவாக காய் நகர்த்தினார். காங்கிரசில் வெளிப்படையான ஓட்டெடுப்பு நடந்தது. மொரார்ஜி தேசாயை விட காமராஜரின் ஆசி பெற்ற இந்திரா காந்தி 186 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமரானார். முதல் ஓராண்டு சுமூகமாக போன இந்திரா -சிண்டிகேட் உறவு உரசலில் ஆரம்பித்து பூகம்பத்தில் முடிந்தது. காங்கிரஸ் பிளவுபட்டது.

இந்திராவும் காமராஜரும் எதிர் எதிர் அணியில் நின்றதால் காங்கிரசுக்கு நஷ்டம் தான். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் கூடஞு ஈணூச்ட்ச்tடிஞி ஈஞுஞிச்ஞீஞு கூடஞு ஐணஞீடிணூச் எச்ணஞீடடி தூஞுச்ணூண் என்ற புத்தகம் இந்த பூகம்பத்தை தொடர்ந்த பத்தாண்டுகளை பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசுகிறது. காங்கிரசின் உட்கட்சி குடுமிப்பிடி சண்டைகளை வெளிப்படையாக விவாதிக்கிறது. 1967ல் தமிழகத்தில் ஆட்சியை தொலைத்த காங்கிரசால் 47 வருடங்களாக முயன்றும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதே போன்ற சூழல் தான் மேற்கு வங்கத்திலும் .

இந்த நிலை எப்படி ஏற்பட்டது?

1966 மே ஒன்றாம் தேதி கோஷ்டி மோதல் முற்றி  மே.வங்க காங்கிரஸ் உடைந்து பங்களா காங்கிரஸ் உதயமாகிறது. 1967 தேர்தலில் மும்முனைப் போட்டி.  காங்கிரசை எதிர்த்து சிபிஎம் தலைமையில் யுஎல்எப் அணியும், சிபிஐ பங்களா காங்கிரஸ், பார்வர்ட் பிளாக் இணைந்த  பியுஎல்எப் அணியும் போட்டியிடுகின்றன. முடிவில் காங்கிரசிற்கு 127 இடங்களும் யுஎல்எப் அணிக்கு 63 இடங்களும் பியுஎல்எப் அணிக்கு 68 இடங்களும் கிடைக்கிறது.

யுஎல்எப்,  பியுஎல்எப் இரண்டும் 18 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆட்சியமைத்தன..

இந்நிலையில் 20 ஆண்டு காலம் பதவியிலிருந்த காங்கிரசால் சும்மா இருக்க முடியவில்லை. ஆளும் கட்சியின் அங்கமான பங்களா காங்கிரசின் 34 எம்.எல்.ஏக்களோடு இணைந்து ஆட்சியமைக்கும் திட்டத்தை ரகசியமாக முடித்து நாள் குறித்தனர்.இந்த ரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்த வங்கத்தின் ஆனந்தபஜார் பத்திரிகை தலைப்பு செய்தியாக்குகிறது. உடைப்பு திட்டம் டமால். உஷாரான சி.பி.எம் பிரச்னைகளை நேர்செய்கிறது. முழுதாக பங்களா காங்கிரசை பெயர்த்துக் கொண்டுவரமுடியாத காங்கிரஸ் அதை உடைத்து பதினேழு எம்.எல்.ஏக்களை தம் பக்கம் இழுக்கிறது. ஆட்சி கலைகிறது.குழப்பத்திற்குப் பின் வங்கத்தில் குடியரசு ஆட்சி அமலுக்கு வருகிறது. 1969 மார்ச்சில் நடந்த மறு தேர்தலில், காங்கிரஸின் மோசமான நடத்தையின் தவறால் சிபிஎம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்கிறது.

அவசரப்பட்ட காங்கிரஸ் நாற்பத்தேழு வருடங்களாக வங்கத்தில் வெறுங்கையுடன் முழம் போட்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ்காரரான பிரணாப் நடுநிலையுடன் இந்த சம்பவங்களை விவரித்து சபாஷ் பெறுகிறார்.

தான் சார்ந்த கட்சியைப் பற்றி மட்டுமல்ல தனக்கெதிரான தகவல்களையும் பதிவு செய்கிறார்.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் டி.ஆர்.வரதாச்சாரி 9 கோடி ரூபாய் பணத்தை டிரங்கு பெட்டிகளில் எடுத்துக் கொண்டு போய் பிரணாப்பின் மால்டா தொகுதியிலும் சஞ்சய் காந்தியின் அமேதி தொகுதியிலும் பட்டுவாடா செய்ததாக ப்ளிட்ஸ் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டதாக பதிவு  செய்துள்ளார்.

இந்த புத்தகம் இந்திராவை ஒரு பற்றுள்ள தொண்டனின் பார்வையோடு அணுகுகிறது.எமர்ஜென்ஸி காலகட்டத்தில்கூட நடந்த பல தவறுகள் இந்திராவின் அனுமதியின்றி அவரது உடனிருந்த பலரது தன்னிச்சையான நடவடிக்கையாக முன் வைப்பது இதற்குமுன் எமர்ஜென்சி கால கட்டம் பற்றி வெளிவந்த புத்தகங்களுக்கு எதிரானதாக உள்ளது.

1977 பொதுத் தேர்தலில் படுதோல்விக்குப்பின்  இந்திரா காந்தி தனிமைப்படுத்தப்படுவதும் ஷா கமிஷனிடம் பெரும்பாலான அமைச்சர்கள் இந்திராவிற்கு எதிராக பேசுவதும் சுவாரஸ்யமானது. தமிழகத்தைச் சார்ந்த மத்திய நிதி மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியம் இந்திரா காந்தியின் வற்புறுத்தலுக்கிணங்க  மத்திய ரிசர்வ் வங்கியில் பலருக்கு பணி நியமனம் செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மத்திய ஜனதா அரசு இந்திராவிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை கண்டிப்பதற்காக கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அனேகர் ஜனதா அரசை விமர்சிப்பதற்கு பதிலாக இந்திரா காந்தியை விமர்சிக்க கூச்சலும் குழப்பமும் மிஞ்சுகிறது. இந்திராவின் ஆசியோடு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பிரம்மானந்த ரெட்டி அவருக்கு எதிராக செயல்படுகிறார்.

அமைதியாக நாட்களை  கடத்தும்  இந்திரா காந்தி ஜனதா அரசால் கைது செய்யப்பட்டபின் வீறுகொண்டு எழுகிறார். இந்திரா காந்தி பற்றி பிரணாப் கூறும் ஒரு சம்பவம் இன்றைய சூழலில் முக்கியமானதாகப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் முறையிட முடிவெடுக்கிறார் இந்திரா. அப்போது பீகாரின்  நாளந்தா மாவட்டத்தில் பெல்ச்சி  கிராமத்தில் 11 தலித்துகள் பணக்கார கூர்மி இனத்தவரால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் செல்வதென்று இந்திரா முடிவெடுக்க சாலைவசதியில்லாத அந்த இடத்திற்கு செல்லமுடியாது, கூடாதென்று தலைவர்கள் கூற ஏற்க மறுக்கிறார் இந்திரா. பெல்ச்சி  போகும் வழியில் ஜீப் சகதியில் சிக்கிக் கொள்கிறது. ஜீப்பை வெளியே எடுக்க டிராக்டர் ஒன்று வரவழைக்கப்படுகிறது, அதுவும் சகதியில் சிக்கிக் கொள்ள, ‘ பயணம் பணால்’ என்று பத்திரிகையாளர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அசராத இந்திரா ஜீப்பிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார். போகாதீர்கள் வழியில் இடுப்பளவிற்கு தண்ணீரும் சகதியும் இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்ல,‘நீந்திப் போவேன்’ என்று வீம்பாக நடக்கிறார் இந்திரா. பதறிய உள்ளூர் காங்கிரஸ்காரர் ஒரு யானைக்கு ஏற்பாடு செய்ய,  இந்திரா அந்த பயணத்தை யானை மேல் அமர்ந்து தொடர்கிறார். ஜீப் சிக்கிய இடத்திலிருந்து சம்பவம் நடந்த கிராமத்தை அடைய மூன்றரை மணி நேரம் ஆனதாம். இந்திராவைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம் பிராணாப்பிடம் ஓர் ஆச்சர்யம் தொற்றிக் கொள்கிறது.

பீகாரில் தலித்துகளை சந்திக்க சென்ற போது வெளிப்பட்ட இந்திராவின் மன உறுதி தான் அவரை மீண்டும் ஆட்சியிலமர்த்தியது. இந்திராவைப் போன்ற மன உறுதியுள்ள ஒருவரால் தான் தற்போதைய காங்கிரஸை காப்பாற்ற முடியும். அது யார்?  

ஜனவரி, 2015.